வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

வெற்றியைச் சிலபேர் என்னவோ கடையில் வாங்குகிற கத்தரிக்காய் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். போனோம் வாங்கி வந்தோம் என்றா வெற்றிகள் கூறுகட்டி விற்கப்படுகின்றன?

சில வெற்றிகள் வேர்ப் பலா போல் பறிக்கச் செளகரியமாய் இருக்கின்றன என்பது உண்மையே. ஆனால் சிலவற்றை ஏறிப் பறிக்கவே பெரும்பாடு படவேண்டியுள்ளதே!

சில திருமண இல்லங்களில், விசேஷங்களில், சில விழாக்களில் தலைப்பாகை கட்டிக்கொண்டு குதிப்பவர்கள் உண்டு.

“அதைச் செய், இதைச் செய்! நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே? நீ ஏன் சும்மா நின்றுக்கிட்டிருக்கே?” என்று எதையாவது கேட்டு இம்சைப்படுத்துவார்கள்.

எல்லாம் நல்லபடி நடக்க வேண்டும். விழாவின் வெற்றி பேசப்பட வேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கம். ஆனால் நிதானப்பேர்வழிகளைக்கூட டென்ஷனாக்கி விடுவார்கள். வெற்றியை அடைவதில் காட்டும் அவசரம் வெறித்தனமாக மாறிவிடும். வெறித்தனம் சேர்ந்து கொண்டால் வெற்றி மட்டுமே இலக்கு. அந்த வெற்றி எப்படி வந்தாலும் சரி என்கிற உணர்வு சேர்த்து கொண்டு விடுகிறது.

வேகமும் வெறித்தனமும் பதற்றத்தைத் தருகின்றன. இது நியாய அநியாயங்களைப் பற்றியெல்லாம் அக்கறைப்படுவது இல்லை. அதுமட்டுமல்ல, லாஜிக்கையும் (தர்க்கம்) புறக்கணித்து விடுகிறது. இது ஒரு மிகப் பெரிய ஆபத்தான செயலாகும். இதனால் உணர்ச்சிதான் கொந்தளித்து நிற்கிறதே தவிர, நடைமுறையான விஷயங்கள் பிடிபடாமல் போகின்றன.

வெற்றி இலக்கை அடைய முடியாதபடி காலை வாரிவிட இதைவிட வேறு வலுவான எதிர்மறைச் சக்தி தேவையில்லை என்கிற சூழ்நிலையும் உருவாகிவிடுகிறது.

ஒருவனின் புறப்படுகிற இடத்திற்கும் வெற்றியின் இலக்கிற்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்கக்கூடும்.இந்த இடைப்பட்ட தூரத்தை அல்லது காலகட்டத்தை மிகக் கவனமாகவும் மனஉறுதியுடனும் நம்பிக்கையுடனும் அணுக வேண்டும்.

கணக்குப் பாடத்தில் இறுதி விடை எப்படி இருந்தாலும் அதைப் போட்டு முடிக்கும் வழிமுறைகளுக்கு (Steps) மதிப்பெண் உண்டு.

இதேபோல வெற்றி இலக்கை அடையாளம் காட்டுகிற பல கட்டங்களில் வெற்றியின் அறிகுறிகள் தெரிய வரும். அவற்றில் மகிழந்து, இளைப்பாறி, வெற்றி இலக்கை மனம் இலயித்து அடையவேண்டுமே தவிர, வெற்றிக்குப் பரபரக்கக் கூடாது.

மீறிப் பரபரத்தால் முட்டைக் கூடைகளை எடுத்துக் கொண்டு தலை தெறிக்க ஓடிய ஒருவனின் கதைதான் மிஞ்சும்