|
விஜய்
டிவி..நீயா
நானா..
‘இவர்கள் சந்தித்தால்’ என்று பல வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷனில்பாரதியாரும் ஒளவையாரும், திருவள்ளுவரும் கம்பரும் என தாடியை ஒட்டி விட்டு,ஒரு மணிநேரத்தை ஓட்டி விடும் நிகழ்ச்சிகள். அப்புறம் கண்மணிப் பூங்கா,ஒளியும் ஒலியும் என இருந்த நிகழ்ச்சிகளை ஒரே மூச்சில் ஓரங்கட்டி, ஆனந்த கீதன், ரெகோ என சன் டீவியின் தமிழ் மாலை பார்ப்பவர்களின் வாயைப் பிளக்க வைத்தது ஆரம்பத்தில்.
ஆனாலும் அவர்களின் பெரும்பான்மையான களம் சினிமா அல்லது மாமியாரா மருமகளா, ஆம் இல்லை என்று சொல்லக் கூடாது போன்ற வேடிக்கை விநோத விளையாட்டு என்று தான் இருந்து வந்தது. குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தி போன்றோர். அப்புறம் இருக்கவே இருந்தது பெப்ஸி உமாவின் அந்தச் சிரிப்பும் இட்லி சட்னி பேச்சுகளும் பாட்டும். அதில் ஒரு முறை பேசி விட்டால் போதும் உடனே சாகத் தயார் என்கிற மாதிரியான ஆட்களைக் கூட உருவாக்கி வைத்திருந்தது அந் நிகழ்ச்சி.
வட இந்திய சேனல்கள் கொஞ்சம் கொஞ்சமாக டாக் ஷோ எனப் படும் விவாதங்களை நோக்கி போய்க் கொண்டிருக்க இங்கே நாம் சிரிப்பு பாட்டு என்று இருந்தோம். ஸ்டார் குழுமம் கொஞ்சம் கொஞ்சமாக (இப்பொழுதும் புதிய நிகழ்ச்சிகளை உள்ளே கொண்டு வருவது விஜய் தான்..ஸ்டார் டிவி மூலம்..அல்லது நிகழ்ச்சியின் மூலங்கள் அங்கே இருந்து தான் வருகிறது)
அது போல ஒரு புது முயற்சியில் இறங்கி, இன்று அது ஒரு தனிப் பெரும் வெற்றியாக இருப்பது விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி.
வெற்றிக்குக் காரணங்கள் என்றுப் பார்த்தால், தமிழில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி இவ்வளவு நேர்த்தியாக இதுவரை கையாளப் படவில்லை, இதை நடத்தும் கோபிநாத் ஒரு மிக முக்கியக் காரணம். நங்கூரம் என்ற சொல்லின் சரியான பயன்பாடோடு நடத்துவதில் இவர் தன் பணியைச் சரியாகச் செய்து எடுத்துச் செல்வது என்பது முக்கியமாகப் படுகிறது.
சரி இப்பொழுது அதற்கு என்ன என்கிறீர்களா?..
மிகப் பெரிய ரீச். சரியான தயாரிப்பாளர். மிகச் சிறந்த நடத்துனர் என்று அமைந்த இந்த விவாத நிகழ்ச்சி மிகச் சில தலைப்புகளைத் தவிர மற்ற வாரங்கள் எல்லாம் மிக மிக வெறுப்பையும், வீணடிப்பு என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.
உதாரணமாக சென்ற வாரத் தலைப்பு..பெண்களுக்கு எந்த விதமான ஆண்களைப் பிடிக்கும்?
எவ்வளவு அபத்தம் ? ஒரு பெண்ணிற்கோ அல்லது ஆணிற்கோ யாரை ஏன் பிடிக்கிறது என்பது அவ்வளவுத் துல்லியமாக சொல்லிவிடக் கூடிய ஒன்றல்ல.. ஒருநொடி நிகழ்வு அது. அதன்பின் நடைபெறுவது எல்லாம் அவரவரின் பார்வையிலான ஒன்று.
சாக்லேட் பாய்ஸ் பிடிக்குமா இல்லை கொஞ்சம் கரடுமுரடான பசங்களைப் பிடிக்குமா என்று இரு பக்கமும் இருபது பெண்களை அமரவைத்து விவாதம் என்றப் பெயரில் எது வேண்டுமானாலும் பேசலாம் என்பது மாதிரி பெண்கள் தங்கள் வாயில் வந்ததைப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு சகோதரி சொல்கிறார்.. “கரடுமுரடான பையன்னா கடைசி வரைக்கும் கைவிட மாட்டான்..சாக்லேட் பாய்னா ஒரு திமிர் இருக்கும்” இதற்கு பதில் அளித்த சகோதரி இன்னும் கொஞ்சம் ஷார்ப். அவர் “சமூகத்தில் சாக்லேட் பாயோடு போனால்தான் ஒரு அந்தஸ்து கிடைக்கும்” இவை எல்லாம் நினைவில் இருந்து எழுதுகிறேன்..சிலவற்றை வேண்டுமென்றே மறந்தும் விட்டேன்..இங்கே எழுதினால் மிகப் பெரிய விவாதமாகும் அபாயம் இருப்பதால்.
அந்த ஒட்டு மொத்த விவாதத்தின் கூறு, பெண்கள் ஆண்களைக் கவர என்னவெல்லாம் செய்கிறார்கள்..எப்படிப் பட்ட ஆணைப் பிடிக்கிறது ஏன் பிடிக்கிறது? என்பதாகவும், ஆண்களும் “நம்மூருக்கு நாய்பிடிக்கிற வண்டி மட்டும் வரட்டும் மகனே உன்னைய பிடிச்சுக் கொடுக்குறேன்” என கவுண்டமனி சொல்வாரே ஒரு படத்தில் அதே போல இது தான் தொழில் என்ற ரீதியில் பெண்கள் பின்னால் அலைவது போலவுமே இருந்தது அந்த இரண்டு மணிநேர விவாதம்.
என்ன கொடுமை கோபி ஸார்?
எனக்குத் தெரிந்த உண்மையான காதலில் ஏன் பிடிக்கிறது என்ற கேள்விக்கு எவராலும் இன்ன காரணத்தினால் என்று ஒற்றையில் சொல்லி விடமுடியாததாகவே இருக்கிறது.
எவ்வளவு பேசலாம்? எவ்வளவு ஆக்கப் பூர்வமான ப்ரைம் டைம் நிகழ்ச்சி அது?
1. பள்ளிகளில் செக்ஸ்கல்வி தேவையா ? நிபுணர்களை அழையுங்கள் விவாதத்திற்கு.
2. 12வது படித்தபிறகு தொழில் முறை தவிர வேறு என்ன என்ன படிக்கலாம்? ஏன் பெற்றோர் அதை நோக்கிப் பயணிப்பதில்லை?
3. விளையாட்டுத் துறை
4. பத்திரிகையும் மீடியாவும் தன் சுதந்திரத்தைப் பயன்படுத்துகிறதா? வைத்து பயமுறுத்துகிறதா?
5. மாணவர்கள் ஏன் அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள்?
6. திரைப்படத்துறையால் மக்களுக்கு கிடைக்கும் பாஸிட்டிவ் நெகட்டிவ்.
இப்படி இன்னும் இதைவிட நல்ல ஆக்கப்பூர்வமான தலைப்புகளில் வாதிடாலாமே பாஸ்.
என்று கேட்கத் தோன்றுகிறது.
வீட்ல எது நடந்தாலும்,திட்டு வாங்குறதுக்கு நாம கிடைச்ச மாதிரி, நமக்கு கிடைச்சது இந்த பிளாக்..கொட்டியாச்சு.
என்றைக்கேனும் டெக்னாலஜி அபரிதமான வளர்ச்சி கண்டு, இது போல தோன்றுவதை எல்லாம் எழுதினால் மானிட்டரில் இருந்து ஒரு கை படாரென்று தோன்றி பளார் என்று அரையப் போகிறதோ..அது வரை எழுதுவோம் இப்படி. என்ன நான் சொல்றது?
|